இந்தியன் பிரீமியர் லீக்கில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவை புதிதாக இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) மூத்த அலுவலர் தெரிவித்துள்ளார்.
துபாயில் உள்ள தாஜ் ஹோட்டலில் புதிய அணிகளுக்கான ஏலம் இன்று (அக். 25) நடைபெற்றது. இதில், லக்னோ அணியை ஆர்பி- சஞ்சீவ் கோயன்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கும், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் ரூ.5,200 கோடிக்கும் வாங்கியுள்ளன.
2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்றுவருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடிவருகிறது.
2010ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் என்ற இரு அணிகள் சேர்க்கப்பட்டு பின்னர் இரு அணிகளும் நீக்கப்பட்டன. தற்போது இரு புதிய அணிகள் வந்துள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு ஐபிஎல்இல் 10 அணிகள் விளையாடவுள்ளன.
இதையும் படிங்க:ரஜினியை பாராட்டிய குடியரசுத் தலைவர்!