டெல்லி : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 16 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டெல்லி அணியை பேட்டிங் செய்யும் படி அழைத்தார்.
டெல்லி அணியில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் நல்ல தொடக்க அமைத்துக் கொடுத்தனர். பிரித்வி ஷா 15 ரன்னும் அடுத்து வந்த மணீஷ் பாண்டே 26 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ச்சி நடைபெற்றாலும் மறுபுறம் கேப்டன் வார்னர் நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார்.
வார்னருக்கு உறுதுணையாக அக்சர் பட்டேல் அரை சதம் விளாசி அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்திச் சென்றனர். 6 பவுண்டரிகள் விளாசிய வார்னர் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். வார்னர் ஆட்டமிழந்ததை அடுத்து அணியின் நிலை மீண்டும் மோசமாகத் தொடங்கியது. சொற்ப ரன்களில் வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்துச் சென்றனர்.
19 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் குவித்து டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அக்சர் படேல் 4 பவுண்டரி 5 சிக்சர் விளாசி 54 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் உதவியால் டெல்லி அணி கவுரமான இலக்கை எட்டியது. மும்பை அணியில் பியூஷ் சாவ்லா, பெஹண்ட்ராப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் ரில்லி மெரிடித் 2 விக்கெட்டும் ஹிரித்திக் ஷோகின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. முந்தைய ஆட்டங்களில் கண்ட தொடர் தோல்வியால் துவண்டு போன மும்பை அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என நிலையில் விளையாடியது. கேப்டன் ரோகித் சர்மா தனக்கே உரிய பாணியில் மட்டையை சுழற்றி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.
மறுபுறம் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் (31 ரன்), திலக் வர்மா (41 ரன்) என நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். அரை சதத்தை கடந்த கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நடப்பு ஐபிஎல்-இல் இதுவரை சோபிக்காத சூர்யகுமார் யாதவ் (0) முதல் பந்தையே தூக்கியடித்து கேட்ச் ஆகி ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார்.
இதனால் மீண்டும் நெருக்கடிக்குள்ளான மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே வீசினார். முதல் 5 பந்துகளில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அன்ரிச் நார்ட்ஜே மிரட்டினார். இதனால் கடைசி பந்தில் 2 ரன் மும்பைக்கு தேவையாக இருந்தது.
இறுதி பந்தை எதிர்கொண்ட டிம் டேவிட் பந்தை 2 ரன்கள் ஓடி எடுத்து நடப்பு சீசனில் மும்பை அணியின் முதல் வெற்றியை உறுதி செய்தார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை சுவைத்தது. கேமரூன் கிரீன் 17 ரன்னுடனும், மாற்று ஆட்டக்காரர் டிம் டேவிட் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதையும் படிங்க :RCB vs LSG: பெங்களூரு அணி தந்த 213 ரன்கள் இலக்கு; ஊதி தள்ளிய நிகோலஸ் பூரன்