மொஹாலி: ஐபிஎல் 2023 போட்டிகளின் 16வது சீசன் தொடங்கி விறுவிறுப்பு குறையாமல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போட்டியின் 46வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஐஎஸ் பிந்திரா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் லிவிங்ஸ்டோன் அரை சதம் கடந்து 82 ரன்கள் உடன் இறுதி வரை விளையாடி அணிக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார். அதேநேரம், ஜித்தேஷ் சர்மா 49 ரன்களில் ஆட்டம் இழக்காமலும், ஷிகர் தவான் 30 ரன்களில் ஆட்டம் இழந்தும் அணிக்கு வலு சேர்த்தனர்.
இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி குவித்தது. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணியின் சாவ்லா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து 215 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்து ஆட்டத்தைத் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து 75 மற்றும் 66 ரன்களை எடுத்தனர்.
இருப்பினும், இந்த முறையும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா ரன்கள் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார். ஆனால், சிறப்பாக சேஸிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவரிலே இலக்கை அடைந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது.