ஐபிஎல் தொடரில் நேற்று (மே 1) நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இந்நிலையில், சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கயக்வாத்தும், ஃபாஃப் டூபிளஸியும் களமிறங்கினார்கள். முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே ருதுராஜ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய மொயீன் அலி, டூபிளஸியுடன் கைகோர்த்து அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
இருவரும் அரைசதம் கடந்தனர். 11ஆவது ஓவரில் 58 ரன்களுக்கு மொயீன் அலியும், 12ஆவது ஓவரில் 50 ரன்களுக்கு டூபிளஸியும் ஆட்டமிழந்தனர். பின்பு வந்த சுரேஷ் ரெய்னா பொல்லார்டு பந்தில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பலமாக இருப்பதாக நினைத்த மும்பை அணியின் எண்ணத்தை அம்பத்தி ராயுடு ருத்ர தாண்டவம் ஆடி தவிடு பொடியாக்கினார். சிக்ஸர், பவுண்டரி என . பும்ரா பந்துகளை விரட்டியடித்து 20 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
ராயுடுவின் அதிரடியான விளையாட்டிற்கு ரவீந்திர ஜடேஜா ஸ்டிரைக் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 200 ரன்களைக் கடந்தது.
இப்போட்டியில் பும்ரா தனது 4 ஓவர்களில் 56 ரன்களை கொடுத்துவிட்டார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. இதில் அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா, குவின்டன் டி காக் சிறப்பாக விளையாடத் தொடங்கினார்கள். ரோஹித் 24 பந்துகளில் 35 ரன்களும், குவின்டன் டி காக் 28 பந்துகளில் 38 ரன்கள் என இருவரும் 58 ரன்கள் அடித்தனர். பின்பு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்கள் மட்டும் அடித்ததால் மும்பை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அதன்பின்பு களமிறங்கிய பொல்லார்ட், க்ருனால் பாண்டியா இருவரும் சென்னையின் பந்துகளை வெளுத்து வாங்கினார்கள். 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து க்ருனால் ஆட்டமிழந்தார். கடைசி சூழ்நிலையில் 12 பந்துகளுக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆறாவதாக களமிறங்கிய ஹார்திக் பாண்டியா தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்தார். கடைசி திக் திக் நேரத்தில் சாம் கரனின் பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 16 (7), ஜேம்ஸ் நீஷம் 0 (1) இருவரும் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவர் லுங்கி நெகிடியிடம் ஒப்படைக்கப்பட்டது. 16 ரன்கள் தேவைபட்ட நிலையில், 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ், 2 ரன்கள் ஓடி எடுத்து வெற்றியை மும்பை வசமாக்கினார் பொல்லார்ட். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் அடித்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் பொல்லார்ட் 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.