மொகாலி : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொகாலி ஐ எஸ் பிந்தரா மைதானத்தில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் கையில் மேயர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். அடித்து ஆடிய மேயர்ஸ் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பினார். மறுபுறம் ராகுல் 9 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய கையில் மேயர்ஸ் 54 ரன்கள் குவித்தார்.
லக்னோ அணியில் வீரர்கள் துரித ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆயுஷ் பதானி 43 ரன் அடித்து ஆடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 72 ரன், நிகோலஸ் பூரான் 45 ரன்கள் விளாசினர். நடுகள வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி இமாலய இலக்கை எட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 257 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்ன் இது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியில் ரபடா 2 விக்கெட்டும் சாம் கரன், லிவிங்ஸ்டோன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.