தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

MI vs LSG: லக்னோ - மும்பை பலப்பரீட்சை; பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார்? - பிளே ஆஃப் ரேஸ் போட்டிகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்குமே இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Today IPL
இன்றைய ஐபிஎல்

By

Published : May 16, 2023, 1:54 PM IST

மும்பை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் Play off race போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (மே 16) நடைபெறும் 63வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றதுடன், 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. 14 புள்ளிகளைப் பெற்றுள்ள அந்த அணி, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி 2வது இடத்துக்கு முன்னேறும். எனினும், எஞ்சியுள்ள அடுத்த லீக் ஆட்டத்திலும் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும். ஒருவேளை ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால், பிற அணிகளின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும். மும்பை அணியின் தற்போதைய ரன் ரேட் -0.117 ஆகும்.

மிரட்டும் மிடில் ஆர்டர்: கடைசியாக குஜராத் அணியுடன் மோதிய மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இஷான் கிஷன், கேப்டன் ரோஹித் நிலைத்து நின்று விளையாடுவது அவசியம். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, டிம் டேவிட் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்துவீச்சில் பெஹ்ரென்டார்ஃப், மத்வால், பியூஷ் சாவ்லா அணிக்கு வலுசேர்க்கின்றனர்.

லக்னோ அணி எப்படி?:லக்னோ அணியைப் பொறுத்தவரை நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ளது. 6 வெற்றி, 5 தோல்வியுடன் அந்த அணி 13 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல, லக்னோ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதுடன், அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். சொந்த மண்ணில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ, 2ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியிருந்தது. குயின்டான் டி காக், கைல் மேயர்ஸ், ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியை தொடர்வது அவசியம். அப்போது தான் மும்பை அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை குவிக்க முடியும். பந்துவீச்சில் ரவி பீஷ்னோய், அமித் மிஸ்ரா வலுசேர்க்கின்றனர்.

ஆட்டம் எங்கே?: மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதும் லீக் ஆட்டம், லக்னோ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

லக்னோ உத்தேச அணி:குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், க்ருணல் பாண்ட்யா (கேப்டன்), ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, ரவி பீஷ்னோய், ஆவேஷ் கான், மொஹ்சின் கான், கே.கவுதம், அமித் மிஸ்ரா.

மும்பை உத்தேச அணி:ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா/விஷ்ணு வினோத், கேமரூன் க்ரீன், நேஹல் வதேரா, டிம் டேவிட், ஜோர்டான், பியூஷ் சாவ்லா, பெஹ்ரென்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஷோகீன்.

ABOUT THE AUTHOR

...view details