ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 7) நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மார்க்ரம் கேப்டன்ஷிப்பில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை இரண்டு ஆட்டங்களில் பங்கேற்றுள்ள லக்னோ அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி, சென்னை அணியுடனான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதேபோல் ராஜஸ்தான் அணியுடன் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இரு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்க உள்ளன.
மிரட்டும் டிகாக்: இரு அணிகளிலும், தென்னாப்பிரிக்க வீரர்கள் இணைந்துள்ளதால் பலம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, லக்னோ அணியில் தென்னாப்பிரிக்கா அதிரடி வீரர் குயின்டான் டி காக் இடம்பிடித்துள்ளார். கைல் மேயர்ஸ் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் அரைசதம் விளாசியுள்ளதால், தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதேபோல் கடந்த 2 போட்டிகளிலும், நிக்கோலஸ் பூரன் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
யாருக்கு ஓய்வு?:குயின்டான் டி காக் வருகையால், நிகோலஸ் பூரன் அல்லது மார்க்கஸ் ஸ்டொய்னிசுக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் யாரை கழற்றிவிடுவது என்பதில், லக்னோ அணிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தால், சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். கவுதம், ஆவேஷ் கான், ரவி பீஷ்னோய், மார்க்வுட் ஆகியோரும் முழு திறனை வெளிப்படுத்தி பந்து வீசினால், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தர முடியும். அதேநேரம் லக்னோ அணி சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.
சமாளிக்குமா சன்ரைசர்ஸ்?:கடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், புதிய கேப்டன் மார்க்ரம் வந்துள்ளதால் அந்த அணி கூடுதல் பலம் பெற்றுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதேபோல் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜேன்சன் ஆகியோரும் அணிக்கு திரும்பியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி ஆகியோர் நிலைமை அறிந்து விளையாடினால் கணிசமான ஸ்கோரை எட்ட முடியும்.