பெங்களூரு : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நீண்ட நாட்களுக்கு பிறகு பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார்.
டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். ஜேசன் ராய் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகியோர் கொல்கத்தா அணியின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமாக விளையாடி இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ஸ்கோரை சீரான இடைவெளியில் உயர்த்தினர்.
27 ரன்கள் எடுத்த ஜெகதீசன், விஜயகுமார் வீசிய பந்தில் டேவிட் வில்லேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அரை சதம் அடித்த ஜேசன் ராய் (56 ரன்) அதே விஜயகுமார் வீசிய பந்தில் இறங்கி ஆட முயன்று போல்டாகினார். அடுத்தடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 31 கேப்டன் நிதிஷ் ரானா 48 ரன் என தங்கள் பங்குக்கு ரன் குவித்து ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 200 ரன்கள் எடுத்தது. அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் 18 ரன்களுடன் களத்தில் நின்றார். பெங்களூரு அணியில் விஜயகுமார், வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தும் முகமது சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.