கொல்கத்தா:நடப்பு ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் 2023, கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் 2023 போட்டியில் இன்று (ஏப்ரல் 14) நடைபெறும் 19ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.
இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய வீரர்கள் தலா 9 ரன்களிலும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 50, மற்றும் அபிஷேக் ஷர்மா 32 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதேநேரம் ஹாரி புரூக் 3 சிக்ஸ் மற்றும் 12 பவுண்டரிகள் என அதிரடியாக விளையாடி சதம் அடித்து, அவுட் ஆகாமல் இருந்தார். இவர் உடன் ஹெயின்ரிச் கிளாசன் 16 ரன்களுடன், அவுட் ஆகாமல் இன்னிங்ஸை நிறைவு செய்தார்.
மேலும் இந்த இன்னிங்ஸில் கொல்கத்தா அணியின் ரசல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 229 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. இந்த நிலையில் கொல்கத்தாவின் ஜெகதீஷன் 36, வெங்கடேஷ் ஐயர் 10 ரசல் 3 ரன்களிலும், குர்பாஜ் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.
மேலும் நிதிஷ் ரடானா அரைசதம் கடந்து 69 ரன்களிலும்,ரிங்கு சிங் 32 ரன்களிலும் விளையாடி வருகின்றனர். எனவே இதுவரை 16 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் தற்போது வரை, ஹைதராபாத் அணியின் ஜான்சென் மற்றும் மார்கண்டே தலா 2 விக்கெடுகளையும் புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.