அபுதாபி:'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.
வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
டாஸ் வென்ற கேகேஆர்
இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 38ஆவது லீக் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று (செப். 26) மோதுகின்றன.
இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக இறங்க, முதல் ஓவரை தீபக் சஹார் வீசினார்.
கில், வெங்கடேஷ் வெளியேற்றம்
முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து பறக்கவிட்ட சுப்மன் கில், கடைசி பந்தில் அவசரப்பட்டு ரன்-அவுட்டாகி வெளியேறினார். அதற்கு முந்தைய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்ட நிலையில், ரிவியூவில் நாட்-அவுட் என அறிவிக்கப்பட்டது.
வெங்கடேஷ் உடன் இணைந்த திரிபாதி ரன்ரேட்டை அதிகப்படுத்தினார். இதனால், கொல்கத்தா அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 50 ரன்களை எடுத்தது.
பின்னர், ஷர்துல் தாக்கூர் வீசிய 5ஆவது ஓவரின் முதல் பந்தில் வெங்கடேஷ் 18 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் கடந்த போட்டியில் அரை சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து களமிறங்கிய கேப்டன் மோர்கன் 8 (14) ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
ராணா - கார்த்திக் பாட்னர்ஷிப்
ஒருபுறம் அதிரடி காட்டிவந்த திரிபாதி, 45 (33) ரன்களில் ஜடேஜாவிடம் போல்டாகி பெவிலியன் திரும்பினார். சற்றுநேரம் அதிரடி காட்டிய ரஸ்ஸல், 20 (15) ரன்களில் தாக்கூர் பந்துவீச்சில் போல்டானார்.
ரஸ்ஸல் வெளியேறிய பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ராணா உடன் இணைந்து சென்னை அணியின் கடைசி கட்ட ஓவர்களை வெளுத்து வாங்கினர். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் 26 (11) ரன்களில் அவுட்டானார்.
இதன்மூலம், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. கடைசி மூன்று ஓவர்களில் கொல்கத்தா அணி 44 ரன்களை எடுத்தது.
சென்னை அணி சார்பில் ஹசல்வுட், தாக்கூர் ஆகியோர் தலா 2 இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிதீஷ் ராணா 37 (27) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க: IPL 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அபராதம்!