சென்னை:ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், டேவான் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 13 பந்துகளில் 17 ரன்னில் வருண் சக்ரவர்த்தியிடம் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களம் இறங்கிய ரஹானே 11 பந்துகளில் 16 ரன் சேர்த்த நிலையில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் ஜேசன் ராயிடம் கேட் ஆகி ஆட்டம் இழந்தார்.
சரியான பார்ட்னர்ஷிப் அமையாத காரணத்தால் துவக்க ஆட்டக்காரர் டேவான் கான்வேயும் ஜொலிக்க முடியாமல் 28 பந்துகளில் 30 ரன் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ராயுடு வந்த வேகத்தில் 7 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் சென்னை அணி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. ஷிவம் டூபே ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க மொயின் அலி 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா, ஷிவம் டூபே உடன் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரவீந்திர ஜடேஜா 24 பந்தில் 20 ரன் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் களம் இறங்கிய கேப்டன் தோனி 3 பந்தில் 2 ரன் சேர்த்து களத்தில் இருந்தார். நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடிய ஷிவம் டூபே 34 பந்தில் 48 ரன் சேர்த்து அவுட் ஆகாமல் இருந்தார். ஷிவம் டூபே, டேவான் கான்வே தவிர்த்து வேறு எவரும் அணிக்கு பெரிதான பங்களிப்பை தராததால் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 144 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது.