அகமதாபாத்:ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் சாஹா 17 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். 53 ரன்கள் எடுத்திருந்த போது நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அபினவ் மனோகர் 14 ரன்களில் வெளியேறினார். கடைசி நேரத்தில் தமிழக வீரர் விஜய் சங்கர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். 24 பந்துகளில் 63 ரன்களை குவித்து அவர் அசத்தினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 63, டேவிட் மில்லர் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை நரேன் 3 விக்கெட்களையும், சுயாஷ் சர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்நிலையில் 205 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கியது கொல்கத்தா. தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 15, ஜெகதீசன் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் நிதிஷ் ராணா அணியை சரிவில் இருந்து மீட்டனர். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 45 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் ரிங்கு சிங் களம் இறங்கிய நிலையில், ஆந்த்ரே ரசல் 1, நரேன் 0, ஷர்துல் தாகூர் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய முதல் பந்தில் உமேஷ் யாதவ் ஒரு ரன் அடித்தார். இதன்பின் விளையாடிய ரிங்கு சிங், யாரும் எதிர்பாராத வகையில் வரிசையாக 5 சிக்ஸர்களை விரட்டி வாண வேடிக்கை நிகழ்த்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ரிங்கு சிங் 48 ரன்களுடனும், உமேஷ் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
குஜராத் அணியில் ரஷீத் கான் 3 விக்கெட்கள், ஜோசப் 2, லிட்டில், ஷமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ரிங்கு சிங் தட்டிச்சென்றார்.