அபுதாபி: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம்கட்டப் போட்டிகள் நேற்று (செப். 19) தொடங்கின. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
சுருண்டது ஆர்சிபி
இந்நிலையில், 31ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சந்தித்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 22 ரன்களை எடுத்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
10 ஓவர்களில் ஃபினிஷ்
அதனையடுத்து, கொல்கத்தா அணியில் சுப்மன் கில், அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினர். இதனால், பவுர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்களை இந்த ஜோடி எடுத்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த சுப்மன் கில், சஹால் வீசிய 10ஆவது ஓவரில் முதல் பந்தில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சுப்மன் கில் தான் சந்தித்த 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்களை எடுத்து, நூலிழையில் அரைசதத்தை தவறவிட்டார். அதே ஓவரில், கடைசி மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த வெங்கேடஷ் ஐயர் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
ஆட்டத்தில் 60 பந்துகள் மிச்சம் வைத்து, பெங்களூரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வெங்கடேஷ் ஐயர் 41 (27) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் தொடரில் நாளை (செப். 20) துபாயில் நடைபெற உள்ள 32ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டால் இணைந்த உயிர்த்தோழர்கள்