ஹைதராபாத்:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 18) நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்கத்தில் பெங்களூரு, சென்னை அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த மும்பை அணி அதன்பின் சுதாரித்து விளையாடியது. அதன் பயனாக, டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டுள்ளது. இதேபோல், ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் வீழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப், கொல்கத்தா அணிகளை வீழ்த்தி, வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. நடப்பு சீசனில் 3வது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் இரு அணிகளும் களம் இறங்குகின்றன.
மும்பை அணி எப்படி?: கடந்த சில ஆட்டங்களில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அவர், 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபார்முக்கு திரும்பியுள்ள சூர்யகுமார் அதிரடியை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷண் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தால் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கணிசமான ஸ்கோரை குவிக்கலாம். திலக் வர்மா, கேமரூன் க்ரீன், டிம் டேவிட் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து வருகின்றனர்.
வருவாரா ஆர்ச்சர்?:பந்துவீச்சை பொறுத்தவரை அனைவரது பார்வையும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் மீது தான் உள்ளது. அவர் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை உடல் தகுதி பெற்றிருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் அவரை களம் இறக்கும் எண்ணம் மும்பை அணியிடம் இல்லை என்றே தெரிகிறது. மெரிடித், ஷோகீன், அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா முழு திறமையை வெளிப்படுத்தினால், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும்.
கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் தடம் பதித்துள்ளார். கடந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அவர் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். எனினும் அவர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டால், திறமையை நிரூபிக்கும் வகையில் விளையாடுவார் என நம்பலாம்.
மிரட்டும் பேட்டிங்:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி அசத்தினார். நடப்பு சீசனில் முதல் சதத்தை பதிவு செய்த அவர், சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார். மயங்க் அகர்வால், கேப்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதியிடம் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கலாம்.