மும்பை: 14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.9) சென்னையில் தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரானது பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இதுவரை கோப்பையையே வென்றிடாத பஞ்சாப் அணியும், ஐபிஎல் முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகின்றன.
இந்த ஐபிஎல் தொடரில் அதிக மதிப்பிற்கு (ரூ.16.25 கோடி) ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் மீது ராஜஸ்தான் அணி பெரும் நம்பிக்கையை வைத்துள்ளது. காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், இத்தொடரின் முதல் கட்ட போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் வேகப்பந்துவீச்சில் முன் நின்று தாக்குதல் நடத்துவது மோரிஸுக்கு கூடுதல் பொறுப்பாகியுள்ளது. கடந்த தொடரில் ஆர்ச்சருக்கு துணையாக வேறுயாருமில்லாமல் சிரமப்பட்ட ராஜஸ்தான் அணி, இம்முறை மோரிஸுக்கு பக்கபலமாக முஷ்தபிஷூர் ரகுமானை தேர்ந்தெடுத்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு வரிசை சற்று பலமிழந்துதான் காணப்படுகிறது. ரிலே மெரிடித், ஜை ரிச்சர்ட்சன், கிறிஸ் ஜோர்டன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் என வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தும் அனுபவம் வாய்ந்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் இல்லாதது தான் இழப்பு.
இன்றையப் போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் என்பது பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளம் என்பதால், இது பஞ்சாப் அணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும். கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், டேவிட் மாலன், மந்தீப் சிங், ஷாருக் கான் என அனைத்து வரிசைகளிலும் பஞ்சாப் அணி மிரட்டலான பேட்ஸ்மேன்களை வைத்திருக்கிறது. எனவே, ராஜஸ்தான் கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை சேர்த்து ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.