டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டாடா ஐபிஎல் 2023 தொடரின் 7ஆவது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 4) தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி களம் காண்கிறது. முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதுகுறித்து பாண்டியா கூறுகையில், முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளோம். இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் இழந்து விட்டோம். இவருக்கு மாற்றாக டேவிட் மில்லர் வருகிறார். விஜய் சங்கர், சாய் சுதர்சன் இருக்கின்றனர். பிட்ச் அருமையாக இருக்கிறது. பனி சற்று பின்னடைவை தரலாம் எனத் தெரிவித்தார்.
முதல் இன்னிங்ஸ்:முதல் களமிறங்கிய டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளுக்கு 37 ரன்களை குவித்தார். இவருடன் பேட்டிங்கை தொடங்கிய பிரித்வி ஷா 7 பந்துகளில் ஆட்டமிழந்தார். 3ஆவதாக வந்த மிட்செல் மார்ஷூம் 4 ரன்களில் விக்கெட்டானார்.
அதன் பின் வந்த சர்பராஸ் கான் நிதானமாக விளையாடி 34 பந்துகளுக்கு 30 ரன்களை எடுத்தார். இருப்பினும், ரன்ரேட் குறைவாகவே இருந்தது. 8ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அக்சர் படேல் 22 பந்துகளில் 36 ரன்களை எடுத்து அணிக்கு வலுசேர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.
மறுபுறம் பந்துவீச்சில் ரஷித் கான், முகமது ஷமி இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். 163 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது.