ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தின் போது குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறியது. இரு அணிகளும் கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும். ஆனால் ஆட்டம் நடைபெறும் நேரத்தில், மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மழை குறுக்கிட வாய்ப்பு: அகமதாபாத் நகரில் இன்று (மே 28) பகலில் வறண்ட வானிலை நிலவும் என்றும், ஆனால் மாலையில் 68 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்டம் நடைபெறும் நரேந்திர மோடி மைதான சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் வானம் 78 சதவீதம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 40 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியும் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.