அகமதாபாத்: 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முன்னேறின. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெற இருந்தது. ஆனால், கனமழை பெய்ததால் மைதானம் குளம் போல் மாறியது. இதைத் தொடர்ந்து நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டு, ரிசர்வ் டே விதிப்படி, இன்று (மே 29) இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில், விருத்திமான் சாஹா களம் இறங்கினர். முதலில் நிதானமாக விளையாடிய இருவரும் அதன்பின் அதிரடியில் இறங்கினர். 20 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன் எடுத்திருந்த சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் கேப்டன் தோனியின் மின்னல் வேக (0.1 செகண்ட்) ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சாஹாவுடன், தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய சாஹா அரைசதம் அடித்தார். 39 பந்துகளை சந்தித்த அவர் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்திருந்த போது தீபக் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார். எனினும் மறுமுனையில் சாய் சுதர்சன் அதிரடியை தொடர்ந்தார். 33 பந்துகளில் அரை சதம் விளாசி அரங்கை அதிர வைத்தார்.
தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய சுதர்சன் சிக்ஸர்களை விளாசி வாண வேடிக்கை நிகழ்த்தினார். 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்திருந்த போது (8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) பதிரனா பந்துவீச்சில் ஆட்டமிழந்து, சதத்தை தவறவிட்டார். கேப்டன் ஹர்திக் பாண்டயா தனது பங்குக்கு 12 பந்துகளில், 21 ரன்கள் எடுத்தார். பதிரனா வீசிய கடைசி பந்தில், ரஷித் கான் (0) ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில், குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை பதிரனா 2, தீபக் சாஹர், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சென்னை அணியின் இன்னிங்ஸ் தொடங்க இருந்த நிலையில் திடீரென மழை பெய்தது. விடமால் மழை பெய்ததால், சென்னை அணி பேட்டிங் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் மழை நின்ற நிலையில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை கொட்டியது. 3 பந்துகளில் சென்னை அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, மைதானம் முழுவதும் தார்ப்பாய் விரிப்புகளால் மூடப்பட்டன.
இரவு 12.10 மணிக்கு துவங்கிய ஆட்டத்தின் போது , ஓவர் எண்ணிக்கை 15 ஆகவும் , இலக்கு 171 ரன் ஆகவும் குறைக்கப்பட்டது . கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் சி எஸ் கே அணி இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது