தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2023 Season Awards: 5வது முறை கர்ஜித்த சிஎஸ்கே.. விருதுகளின் முழு விவரம்

ஐபிஎல் 2023 சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற நிலையில், இந்த சீசனின் முழு விருது பட்டியலைக் காணலாம்.

IPL 2023 Season Awards: 5வது முறை கர்ஜித்த சிஎஸ்கே.. விருதுகளின் முழு விவரம்
IPL 2023 Season Awards: 5வது முறை கர்ஜித்த சிஎஸ்கே.. விருதுகளின் முழு விவரம்

By

Published : May 30, 2023, 8:24 AM IST

அகமதாபாத்: ஐபிஎல் 2023 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதன் இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதன் மூலம் 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக, நேற்றைய முன்தினம் (மே 28) இறுதிப் போட்டி கால அட்டவணைப்படி நடைபெற இருந்த நிலையில், மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் போட்டி அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டு, நேற்று (மே 29) நடைபெற்றது. இருப்பினும், வானிலை சற்று மந்தமாகவே இருந்தது. இதனிடையே டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சஹா அரை சதம் கடந்த நிலையில் 54 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 39 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும், ரஷீத் கான் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க, ஹார்திக் பாண்டியா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி குவித்தது. இந்த இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிரானா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 215 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் மழை கொட்டியது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. முன்னதாக, சிஎஸ்கே பேட்டிங்கை தொடங்கும்போதும் மழை பெய்தது.

பின்னர், டிஎல்எஸ் முறையின்படி ஓவர் 15 ஆகவும், இலக்கு 171 ஆகவும் குறைக்கப்பட்டது. எனவே, அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டீவன் கான்வாய் 47, ருத்துராஜ் கெய்க்வாட் 26, ரஹானே 27, அம்பத்தி ராயுடு 19 மற்றும் தோனி ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இருப்பினும், சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் என்ற குறைக்கப்பட்ட இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதனை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் மட்டுமல்லாது சிஎஸ்கேவின் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர். ஆட்டத்தின் முடிவில், ஐபிஎல் 2023 போட்டிக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விவரம்,

  • சாம்பியன் பட்டம் - சென்னை சூப்பர் கிங்ஸ் - 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை
  • ரன்னர் - குஜராத் டைட்டன்ஸ் - 12.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை
  • ஃபேர் பிளே விருது - டெல்லி கேப்பிடல்ஸ்
  • ஆரஞ்ச் கேப் - சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
  • பர்ப்பிள் கேப் - முகமது ஷமி (குஜராத் டைட்டன்ஸ்)
  • மிகவும் மதிப்புமிக்க வீரர் - சுப்மன் கில்
  • வளர்ந்து வரும் வீரர் - யாசஷ்வி ஜாய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • அதிக தூரம் சிக்ஸர் அடித்த வீரர் - ஃபாப் டூ பிளசிஸ் (115 மீ - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  • சூப்பர் ஸ்டிரைக்கர் - கிளென் மேக்ஸ்வெல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  • அதிக பவுண்டரிகள் - சுப்மன் கில்
  • இந்த சீசனுக்கான சிறந்த கேட்ச் - ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்)
  • பிட்ச் மற்றும் மைதானம் - ஈடன் கார்டன் கொல்கத்தா, வான்கடே ஸ்டேடியம் மும்பை

இதையும் படிங்க:8 அணிகளுடன் அதிரடியாக ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்

ABOUT THE AUTHOR

...view details