பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 2) டாடா ஐபிஎல் 2023 தொடரின் 5ஆவது லீக் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பெங்களூரு அணியில் வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை கேப்டன் டு பிளெசிஸ் உள்பட மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ரீஸ் டாப்லி ஆகியோர் இருந்தனர். அதேபோல மும்பை அணியில் டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோர் இருந்தனர்.
முதல் இன்னிங்ஸ்:மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். இதில் கிஷன் 2 ஓவரின் 3ஆவது பந்திலேயே கேட்ச் கொடுத்து விக்கெட்டானார். 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இவருக்கு அடுத்து வந்த கேமரூன் கிரீனும் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 3ஆவது ஓவரில் விக்கெட்டானார்.
அதன்பின் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இவருடன் சேர்ந்து ரோஹித் சர்மா நிதானமாக விளையாடியும் 5 ஓவரின் 2ஆவது பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பின், திலக் வர்மா-சூர்யகுமார் கூட்டணி இணைந்தது.
மும்பை ரசிகர்கள் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்துக்கு காத்திருந்த நிலையில் அவரும் 8ஆவது ஓவரில் அவுட்டானார். 9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து திலக் வர்மா அதிரடி காட்டி ரன்களை அதிகரித்தார்.
46 பந்துகளில் 84 ரன்களை எடுத்து இறுதி வரையில் களத்தில் இருந்தார். இவருக்கு அடுத்து வந்த நேஹால் வதேரா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன் மூவரும் முறையே 21, 4, 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த வகையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணி 171 ரன்களை எடுத்தது. கோலி விக்கெட்டை இழக்காமல் 82 ரன்களை குவித்தார்.