ஹைதராபாத்: ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், ஒவ்வொரு அணியும் தங்களது முழு பலத்தைக் காண்பித்து வருகின்றனர். இதனால் ஐபிஎல் ரசிகர்களும் பேராவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் 2023 போட்டியில் மே 18-ஆம் தேதி நடைபெற்ற 65வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸி, சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதனால் பேட்டிங்கில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிளாசன் சதம் விளாசி 104 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த இன்னிங்ஸில் 6 சிக்ஸ் மற்றும் 8 பவுண்டரிகள் விளாசி அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார். ஆனால், அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஹாரி புரூக் மட்டும் 27 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது.
அதேநேரம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிரேஸ் வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும், ஹர்ஷல் படேல் சதம் கடந்த கிளாசனை அவுட் ஆக்கினார். இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆட்டத்தின் அடுத்த இன்னிங்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 187 என்ற இலக்குடன் களம் இறங்கியது.