பெங்களூரு: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் களமிறங்கின.
மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் இன்னிங்சை விராட் கோலியும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிசும் தொடங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பினர்.
கேப்டன் பாப் டு பிளஸ்சிஸ் 28 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கி க்ளென் மேக்ஸ்வெல் 11 ரன், மனிபல் லோம்ரர் 1 ரன் என பெரிய அளவில் சோபிக்கவில்லை. மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி அரை சதம் அடித்தார். அணியின் நிலை அறிந்து விளையாடத் தொடங்கிய விராட் கோலி வாண வேடிக்கை காட்டத் தொடங்கினார்.
குஜராத் பந்துவீச்சாளர்களில் சோதித்து பார்த்த கோலி, அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார். அடித்து விளையாடிய கோலி, அடுத்த 20 பந்துகளில் சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடிய விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சர் என 101 ரன்கள் விளாசினார். குஜராத் அணியில் பந்துவீச்சாளர்கள் நூர் அகமது 2 விக்கெட்டும், முகமது ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.