ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மே 28ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில், தற்போது லீக் ஆட்டங்கள் நடக்கிறது. கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு அணிகளும், எதிரணிக்கு டஃப் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் முன்னணி வீரர்கள் காயத்தால் விலகியிருப்பது, பல்வேறு அணிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருசில வீரர்கள் ஐபிஎல் தொடர் தொடங்கு முன்பே, விலகிவிட்டனர்.
பும்ரா, பண்ட்:காயம் காரணமாக அவதியடைந்து வரும் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, நடப்பு சீசனில் விளையாடவில்லை. அணியில் அவர் இடம்பெறாதது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 7ம் தேதி தொடங்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அவர் தயாராகிவிடுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதேபோல் கார் விபத்தில் படுகாயம் அடைந்த டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட், குணமடைந்து வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் டெல்லி அணி மோதிய கடைசி ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார். சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகம் தான். ரிஷப் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கேன் வில்லியம்சன்:குஜராத் அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் காயம் அடைந்தார். வலது கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார். உலககக் கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.