தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

MI vs LSG: போராடி தோல்வி அடைந்த மும்பை.. லக்னோ த்ரில் வெற்றி! - மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

MI vs LSG: போராடி தோல்வி அடைந்த மும்பை.. லக்னோ த்ரில் வெற்றி
MI vs LSG: போராடி தோல்வி அடைந்த மும்பை.. லக்னோ த்ரில் வெற்றி

By

Published : May 16, 2023, 7:20 PM IST

Updated : May 17, 2023, 6:50 AM IST

லக்னோ: ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியின் 63வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்டோய்னிஸ் அபாரமாக விளையாடி அரை சதம் கடந்து 89 ரன்கள் எடுத்த நிலையில், இறுதி வரை ஆட்டம் இழக்காமலே இருந்து அணிக்கு வலு சேர்த்தார். அதேபோல், குர்னல் பாண்டியா 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 177 ரன்கள் எடுத்தது. அதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணியின் பெஹ்ரெண்ட்ரோஃப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 178 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங்கில் ஆடத் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷான் அரை சதம் கடந்து 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேபோல், ரோகித் ஷர்மா 37 ரன்களில் ஆட்டம் இழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இருப்பினும், டிம் டேவிட் 32 ரன்கள் எடுத்து இறுதி வரை போராடினார். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த இன்னிங்ஸின் முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதேநேரம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் யாஷ் தாகூர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வலு சேர்த்தனர். இந்த நிலையில், 7 வெற்றி 5 தோல்வி என 15 புள்ளிகள் உடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3வது இடத்திலும், 7 வெற்றி 6 தோல்வி என மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகள் உடன் 4வது இடத்திலும் உள்ளது.

எனவே, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் தகுதியை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நழுவ விட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மும்பை அணிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளின் ஆட்ட முடிவுகளும் மிக முக்கியமானதாக உள்ளது.

இதையும் படிங்க:GT Vs SRH: ஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்!

Last Updated : May 17, 2023, 6:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details