கொல்கத்தா:ஐபிஎல் களத்தை Rivalry week போட்டிகள் அதிர வைத்துள்ளன. ஒவ்வொரு ஆட்டமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடக்கிறது. இந்நிலையில் இன்று (மே 11) நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மிரட்டும் ரிங்கு சிங்: நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 5 ஆட்டங்களில் வெற்றி, 6 போட்டிகளில் தோல்வி என 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணியின் வெற்றி மெச்சும்படி இருந்தது. குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தின் கடைசி பந்தில், பவுண்டரி விளாசி ரிங்கு சிங் வெற்றி தேடி தந்தார். எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அவர், இந்த போட்டியிலும் அதிரடியை காட்டுவார் என நம்பலாம். 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 337 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 4ம் இடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது.
ஜேசன் ராய், நிதிஷ் ராணா, ரசல் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர். குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் நிலைமையை உணர்ந்து விளையாடினால், நல்ல ஸ்கோரை எட்ட முடியும். பந்து வீச்சாளர்களில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா ரன்களை வாரி வழங்குகின்றனர். சுனில் நரேன் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேநேரம் தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பந்து வீசுகிறார். நடப்பு சீசனில் இதுவரை 17 விக்கெட்களை சாய்த்துள்ளார்.
மீண்டு வருமா ராயல்ஸ்?:ராஜஸ்தான் அணியும் கொல்கத்தாவை போல 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்று, 5வது இடத்தில் உள்ளது. கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளதால், வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் அணிக்கு வலுசேர்க்கின்றனர். கேப்டன் சாம்சன், ஹெட்மேயரும் ஃபார்மில் உள்ளனர். அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டும் இடம்பெற்றுள்ளார்.