ஹைதராபாத்: பொதுவாக கிரிக்கெட் களத்தில் இருதரப்பு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது சகஜம். வெற்றி மட்டுமே அவர்களது முக்கிய குறிக்கோளாக இருக்கும். களத்தில் ஏற்பட்ட வெறுப்பு, வீரர்கள் மத்தியில் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. காலப்போக்கில் மறைந்து விடும் என்பது தான் உண்மை. இது ஒருபுறம் இருக்க எந்த ஆண்டும் இல்லாத வகையில், நடப்பு ஐபிஎல் சீசனில் ஏகப்பட்ட சர்ச்சைகள்.
இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது. குறிப்பாக அந்த அணியின் முன்னணி வீரர் விராட் கோலி, ஆக்ரோஷமாக விளையாடினார். லக்னோ அணியுடனான லீக் ஆட்டத்தில் அந்த அணியின் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி இடையே திடீரென வார்த்தை போர் ஏற்பட்டது. இந்த பிரச்னையில் அணியின் ஆலோசகர் கம்பீர் தலையிட்டதால், கோலிக்கும், கம்பீருக்கும் மோதல் உருவாகி இணையத்தில் பேசுபொருளானது. கோலி - கம்பீர் தரப்பு ரசிகர்கள் இணையத்தில் பரஸ்பரம் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
நடப்பு சீசனில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி, தோல்வியை தழுவியதால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. ஆனால் இந்த தோல்வியை பொறுக்க முடியாத அந்த அணியின் ரசிகர்கள், எதிரணி வீரர்களை விமர்சித்த விதம் தான், சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சதம் விளாசி அசத்திய குஜராத் அணியின் முன்னணி வீரர் சுப்மன் கில், கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தின் கார் விபத்துக்குள்ளான புகைப்படத்தை பதிவிட்ட பெங்களூரு ரசிகர் ஒருவர், இந்த காரில் சுப்மன் கில் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தைகளை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது.