கொல்கத்தா:ஐபிஎல் தொடரின் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பந்து வீச்சை தேர்வு செய்தார். பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்க வேண்டிய நிலையில், மழை குறுக்கிட்டதால் மாலை 4.15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. எனினும், ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.
கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 19 ரன்களில் வெளியேறினார். ஷர்துல் தாகூர் 0, வெங்கடேஷ் ஐயர் 11, நிதிஷ் ராணா 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ் அரைசதம் விளாசினார். 39 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த அவர், நூர் அகமது பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். ரிங்கு சிங் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் அதிரடி காட்டிய ரசல், 19 பந்துகளில் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. டேவிட் வீசா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். குஜராத் அணியில் பந்து வீச்சை பொறுத்தவரை முகமது ஷமி 3, லிட்டில் மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்டுளை வீழ்த்தினர்.
இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணியின் விருத்திமான் சாஹா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 49, ஹர்திக் பாண்ட்யா 26 ரன்களில் வெளியேறினர். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விஜய் சங்கரும், டேவிட் மில்லரும் அதிரடியாக ரன் சேர்த்தனர். குறிப்பாக விஜய் சங்கர் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் 17.5 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எட்டி அபார வெற்றி பெற்றது. விஜய் சங்கர் 24 பந்துகளில் 51 ரன்களுடனும் (2 பவுண்டரி, 5 சிக்ஸர்), மில்லர் 32 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.