அகமதாபாத்: ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இறுதிப்போட்டிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதிபெற்றுவிட்டது. இதையடுத்து, பிளே ஆஃப் சுற்றின் 2ஆவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதின.
அகமதாபாத் நரேந்திர மோடி நடைபெற்ற இப்போட்டியில், டாஸை இழந்த பெங்களூரு அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், ராஜஸ்தான் 18.1 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதன்மூலம், ராஜஸ்தான் அணி 2008ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிறகு தற்போது முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
ராஜஸ்தானில் அதிகபட்சமாக பட்லர் 106 ரன்களை குவித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நடப்பு தொடரில் இது அவரின் 4ஆவது சதமாகும். இதன்மூலம், ஒரு தொடரில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் பட்லர், கோலியுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோலி 4 சதங்களை அடித்து 973 குவித்திருந்தார். தற்போது, பட்லர் அதே 4 சதங்களுடன் 824 ரன்களை எடுத்து ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
முன்னதாக, ஆர்சிபி அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக 58 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா, மெக்காய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (மே 29) இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.
இதையும் படிங்க: கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு அடித்த ஜாக்பாட்! வேலைவாய்ப்பு வழங்கிய இந்தியன் ஆயில் நிறுவனம்