மும்பை: ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (மே 17) 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், ஹைதராபாத் அணி, 12 போட்டிகளில் 5 வெற்றிகள் 7 தோல்விகள் என்ற கணக்கில் 8ஆவது இடத்தில் உள்ளது.
மறுப்புறம் மும்பை அணி 12 போட்டிகளில் 3 வெற்றிகள் 9 தோல்விகள் என்ற கணக்கில் 10ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணி பிளே ஆஃப் செல்ல முடியாது. ஆனால், ஹைதராபாத் அணிக்கு ஒரு வாய்ப்புள்ளது. அதாவது, ஹைதராபாத் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், 14 புள்ளிகள் கிடைக்கும்.
இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியும். இந்த வாய்ப்பும் 4ஆவது இடத்தில் உள்ள டெல்லி அணி மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் தோற்றால் மட்டுமே கிடைக்கும். இதேபோன்ற ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு, 59ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு கிடைத்தது.
ஆனால், மும்பை அணி சென்னை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வாய்ப்பை பறித்தது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெல்லுமா அல்லது சென்னையை போல் வீழுமா என்பதை காண ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.