மும்பை: ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேற்று (மே 18) மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்த ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங் செய்து 193 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 76 ரன்களை எடுத்தார். மும்பை சார்பில் ரமன்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் ஆடிய மும்பை அணிக்கு ஓப்பனர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த தொடர் முழுவதும் ஏமாற்றத்தை அளித்துவந்த ரோஹித் - இஷான் கிஷன் ஜோடி நேற்றைய போட்டியில் விரைவாக ரன்களை சேர்த்தது.
டிம் டேவிட் வெறியாட்டம்: முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை இந்த ஜோடி எடுத்தது. ரோஹித் 48, கிஷன் 42, திலக் வர்மா 8, டேனியல் சாம்ஸ் 15, ஸ்டப்ஸ் 2 ரன்கள் என அடுத்தடுத்து வீரர்கள் நடையைக் கட்டினாலும், மறுமுனையில் டிம் டேவிட் மும்பை அணிக்கு விறுவிறுவென ரன்களை குவித்து வந்தார். அவர் நடராஜன் வீசிய 18ஆவது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்திய நிலையில், அதே ஓவரின் கடைசி பந்தில் ரன் - அவுட்டாகி ஏமாற்றதுடன் வெளியேறினார்.
மெய்டன் விக்கெட் ஓவர்:அவர் 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 46 ரன்களை சேர்த்திருந்தார். பின்னர் வந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், அறிமுக வீரருமான சஞ்சய் யாதவ் புவேனஷ்வர் வீசிய 19ஆவது ஓவரில் டக் - அவுட்டானார். மேலும், அந்த ஓவரில் ஒரு ரன் கூட எடுக்கப்படாததால், கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.