தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

MI vs GT: லாஸ்ட் ஓவரில் குஜராத்துக்கு குட்டுவைத்த மும்பை! - Tim David

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

MI vs GT
MI vs GT

By

Published : May 7, 2022, 7:26 AM IST

மும்பை: ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நேற்று (மே 6) மும்பை பிரபோர்ன் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது.

கைக்கொடுத்த ஓப்பனிங்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மிரட்டலான தொடக்கத்தை அளித்தாலும், மும்பையின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை. இருப்பினும், இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் அதிரடி காட்ட, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் 45, டிம் டேவிட் 44, இஷான் கிஷன் 43 ரன்களை குவித்தனர். குஜராத் பந்துவீச்சு தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும், சங்வான். பெர்ஃகுசன், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டபுள் அரைசதம்: 178 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஓப்பனர்கள் சாஹா, கில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தலான அடித்தளத்தை அமைத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 106 ரன்களை குவித்தாலும், அடுத்து வந்த கேப்டன் ஹர்திக், சாய் சுதர்சன் ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், கடைசி ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் குஜராத் அணியின் முரட்டு ஃபினிஷர்களான டேவிட் மில்லர், ராகுல் திவேடியா ஆகியோர் இருந்தனர்.

லாஸ்ட் ஓவர் த்ரில்லர்: அந்த ஓவரை டேனியல் சாம்ஸ் வீச வந்தார். இவர் கடந்த ஏப்.7ஆம் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் இவரின் ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசியிருந்தது நினைவுக்கூரத்தக்கது. ஆனால், நேற்றைய போட்டியில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வீசிய சாம்ஸ் வெறும் 3 ரன்களை கொடுத்தது மட்டுமில்லாமல் திவேடியாவின் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணியை வெற்றிபெறச் செய்தார்.

குஜராத் அணி 20 ஓவர்களில் 172 ரன்களை மட்டும் எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை பந்துவீச்சில் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பொல்லார்ட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மும்பை அணியின் இறுதி ஓவர்களில் அதிரடி காட்டி, 21 பந்துகளில் 44 ரன்களை குவித்த டிம் டேவிட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

புள்ளிகள் பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 8 தோல்வி) கடைசி இடத்திலும், குஜராத் அணி 16 புள்ளிகளுடன் (8 வெற்றி, 3 தோல்வி) முதலிடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: கரோனாவால் ஆசிய விளையாட்டுகள் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details