மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று (ஏப். 30) மோதின. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
தொடர்ந்து, ராஜஸ்தான் பேட்டர்களில் பட்லர் 67 (52) ரன்களை எடுக்க, மற்றவர்கள் சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 158 ரன்களையே எடுத்தது. மும்பை பந்துவீச்சில் இளம் வீரர் ஹிர்த்திக் ஷோகின், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, மும்பை ஓப்பனர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் விரைவாக வெளியேறினாலும், இஷான் பவர்பிளே முடியும் வரை தாக்குப்பிடித்தார். அதன்பின்னர், ஜோடி சேர்ந்த சூர்யகுமார் - திலக் வர்மா ஆகியோர் ராஜஸ்தானின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர்.
மூன்றாம் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 81 ரன்களை இந்த ஜோடி குவித்த நிலையில், சூர்யகுமார் 51 (39) ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும், திலக் வர்மா 35 (30) ரன்களில் பெவிலியன் திரும்ப, டிம் டேவிட் - பொல்லார்ட் ஜோடி பொறுமையாக மும்பை அணியை வெற்றி நோக்கி அழைத்துசென்றது. ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்தில் பொல்லார்ட் அவுட்டானார். தொடர்ந்து, 2ஆவது பந்தில் டேனியல் சாம்ஸ் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வுசெய்யப்பட்டார்.
புள்ளிகள் பட்டியலில் நேற்று எந்த மாற்றமும் இல்லை. மும்பை அணி 2 புள்ளிகளுடன் (1 வெற்றி, 8 தோல்வி) கடைசி இடத்திலும், ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி) 2ஆவது இடத்திலும் உள்ளன. மும்பை - ராஜஸ்தான் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற குஜராத் - பெங்களூரு போட்டியில், ஆர்சிபி படுதோல்வி அடைந்தது. இதனால், குஜராத் முதலிடத்திலும், பெங்களூளு 5ஆவது இடத்திலும் நீடிக்கின்றன.
இதையும் படிங்க: தென்காசியில் ஒரு சச்சின்... 6 வயது சிறுவனின் மிகப்பெரிய கனவு...