மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் மகாராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி புனே எம்சிஏ மைதானத்தில் நேற்று (ஏப். 29) நடைபெற்றது.
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் அணிக்கு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஓப்பனிங் பேட்டர் டி காக் 46 (37) ரன்களையும், தீபக் ஹூடா 34 (28) ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபாடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
போராடாத பேட்டர்கள்: தொடர்ந்து, 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஓரளவுக்கு ஆறுதலை தந்தது. கேப்டன் மயாங்க் அகர்வால் - ஷிகர் தவான் ஜோடி 35 ரன்களை எடுத்த நிலையில், அகர்வால் 25 (17) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின், டாப் ஆர்டர் பேட்டர்களான தவான், ராஜபக்சே, லியம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பேர்ஸ்டோவ் மட்டும் 28 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தார்.