வான்கடே:கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், கிரிக்கெட் ஆர்வலர்கள், வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். . மேலும், கூடுதல் சிறப்பாக, சச்சினின் பிறந்தநாளான நேற்று, அவர் ஆலோசகராக பணிபுரியும் மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டி, சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரும் பங்கை வகிக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
169 ரன்கள் இலக்கு: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை அணிக்கு, 169 ரன்களை லக்னோ இலக்காக நிர்ணயித்தது. மும்பை அணிக்கு, கடந்த 7 போட்டிகளாக ஓப்பனிங்கில் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் அந்த அணிக்கு இஷான் கிஷன் மெதுவாக ஆடினாலும், ரோஹித் பவுண்டரிகள் மூலம் ரன்களை குவித்து வந்தார்.
சரிந்த இமயங்கள்: மும்பை அணி, பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை எடுத்து ரன்ரேட்டை 7-இல் வைத்திருந்தது. ஸ்கோர் நிதானமாக உயர்ந்து வந்தபோது, மும்பை பேட்டர்கள் இஷான் கிஷன் 8 (20), டிவால்ட் பிரீவிஸ் 3 (5), ரோஹித் சர்மா 39 (31), சூர்யகுமார் யாதவ் 7 (7) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், ரன்வேகம் குறைந்தது. தொடர்ந்து விளையாடிய திலக் வர்மா - கைரன் பொல்லார்ட் ஜோடி சிங்கிள், டபுள்ஸ் என ஓடி ஓடி ரன்களை சேர்த்தாலும், பவுண்டரிகளை அடிக்க மிகவும் திணறியது.
கடைசி ஓவரில் 3 விக்கெட்:12ஆவது ஓவரில் சேர்ந்த ஜோடி 18ஆவது ஓவர் வரை தாக்குபிடித்து 57 ரன்களை சேர்த்தது. ஆறுதல் அளித்த திலக் வர்மா 38 (27) ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறுதி ஓவரில் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது.