மும்பை:15ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப். 24) இரவு நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில், ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி வழக்கம் போல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மிரட்டிய யான்சன் - நடராஜன்:இதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணி இரண்டாம் ஓவரில் இருந்தே சரிவை சந்தித்தது. டூ பிளேசிஸ் 5, அனுஜ் ராவத் 0, கோலி 0 ரன்களில் வெளியேறினர். இம்மூன்று விக்கெட்டுகளையும் மார்கோ யான்சன் வீழ்த்தினார். தொடர்ந்து, நடராஜன் மேக்ஸ்வெல்லை 12 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து, மிடில் ஆர்டரில் பிரபுதேசாய் 15, தினேஷ் கார்த்திக் 0, ஷாபாஸ் அகமது 7 ரன்களில் வெளியேறினர். டெயிலெண்டர்களும் விரைவாக ஆட்டமிழக்க, 16.1 ஓவர்களில் வெறும் 68 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. ஹைதராபாத் பந்துவீச்சில் யான்சன், நடராஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சுசித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆர்சிபியும் ஏப்ரல் 23-ஆம் தேதியும்...: இந்த 68 ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது குறைவான ஸ்கோராகும். பெங்களூரு அணி 8ஆவது முறையாக 100 ரன்களுக்கு கீழ் ஆல்-அவுட்டாகியுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரையும் (263), குறைந்தபட்ச ஸ்கோரையும் (49) பெங்களூரு அணியே எடுத்துள்ளது.