தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

RCB vs LSG: டூ பிளேசிஸ் எழுச்சியால் 2ஆம் இடத்திற்கு முன்னேறிய ஆர்சிபி - ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூரூ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 96 ரன்களை எடுத்து சிறப்பாக ஆடிய ஆர்சிபி கேப்டன் டூ பிளேசிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

RCB vs LSG
RCB vs LSG

By

Published : Apr 20, 2022, 7:35 AM IST

Updated : Apr 20, 2022, 7:56 AM IST

மும்பை:15ஆவது ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று (ஏப். 19) நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

தடுமாற்றம்: கடந்த போட்டியில் இருந்த அதே வீரர்களுடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பேட்டிங் முதலில் சொதப்பியது. அனுஜ் ராவத் 4 (5), விராட் கோலி 0 (1), மேக்ஸ்வெல் 23 (11) ரன்கள் என அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்ப பவர்பிளே முடிவில் அந்த அணி 47/3 என்ற நிலையில் இருந்தது.

டூ பிளேசிஸ் 96:ஒருபுறம் டூ பிளேசிஸ் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார், மற்ற பேட்டர்கள் யாரும் பெரியளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. மேலும், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டூ பிளேசிஸ் 96 ரன்களில் கடைசி ஓவரில் அவுட்டாக,பெங்களூரூ அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ரன்களை எடுத்தது. லக்னோ பந்துவீச்சில் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

குர்னால் அதிரடி: 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. டி காக், மனீஷ் பாண்டே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற கே.எல்.ராகுல் 30 (24), தீபக் ஹூடா 13 (14) ஆகியோர் சற்றுநேரம் தாக்குபிடித்தனர். மறுமுனையில், குர்னால் பாண்டியா அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை குவித்தார். அவர் 28 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 42 ரன்களை எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

5ஆவது வெற்றி:தொடர்ந்து டவுண் தி ஆர்டர் பேட்டர்களான ஆயுஷ் பதானி, ஸ்டோய்னிஸ், ஹோல்டர் ஆகியோர் பெரிய அளவில் சோபிக்காததால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி தொடரில் 5ஆவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

பெங்களூரூ அணியின் ஹசல்வுட் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 64 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 96 ரன்களை குவித்து பெங்களூரூ அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்த கேப்டன் டூ பிளேசிஸ் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

இன்றைய போட்டி:புள்ளிப்பட்டியலில், பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) 2ஆவது இடத்திலும், லக்னோ அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 3 தோல்வி) 4ஆவது இடத்திலும் உள்ளன. ஐபிஎல் தொரில் இன்று (ஏப். 20) நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: முதல் இடத்தில் குஜராத்... அதள பாதாளத்தில் மும்பை...

Last Updated : Apr 20, 2022, 7:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details