புனே: 15ஆவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புனே எம்சிஏ மைதானத்தில் நேற்றிரவு (ஏப். 17) நடைபெற்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.
முதல் ஆப்கன் கேப்டன்:டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் காரணமாக நேற்று ஓய்வளிக்கப்பட்டதால், ரஷித் கான் கேப்டன் பொறுப்பேற்றார். ஐபிஎல் வரலாற்றில், கேப்டனாகும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை ரஷித் பெற்றார். மேலும், குஜராத் பிளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியா, மேத்யூ வேட் ஆகியோருக்கு பதிலாக விருத்திமான் சாஹா, அல்ஸாரி ஜோசப் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மீண்டு வந்த ருதுராஜ்: இதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 73 (48) ரன்களையும், அம்பதி ராயுடு 46 (31) ரன்களையும் சேர்த்தனர். குஜராத் பந்துவீச்சில் ஜோசப் 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, யாஷ் தயாள் ஆகியோர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பவர்பிளே பந்துவீச்சு: 170 ரன்கள் என்ற சுமாரான இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. இந்த தொடரில், சென்னை அணியின் பவர்பிளே பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்து வந்தது. ஆனால், நேற்றைய போட்டியில், முதல் நான்கு ஓவர்களிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சுப்மன் கில், விஜய் சங்கர், அபினவ் மனோகர் ஆகியோரை சென்னை பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். இதனால், குஜராத் அணி பவர்பிளே ஓவர்கள் முடிவில் 37/3 என்ற நிலையில் இருந்தது.
6ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்: இதன்பின்னர் வந்த சாஹா, திவாத்தியா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி குஜராத் அணிக்கு பெரும் அழுத்தத்தை உண்டாக்கினர். இருப்பினும், மறுமுனையில் டேவிட் மில்லர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரோடு கேப்டன் ரஷித் கானும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஒருகட்டத்தில் 17 ஓவர்கள் முடிவில் 122/5 என்ற நிலையில் குஜராத் இருந்தது. அதாவது 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது.