புனே: 15ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப். 9) இரவு நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
சிக்சர் மழைப்பொழிந்த சூர்யகுமார்: இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு தொடக்கமும், பினிஷிங் ஓரளவுக்கும் அமைந்தாலும், மிடில்-ஆர்டர் மிகவும் சொதப்பலாக அமைந்தது. எனவே, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுர்யகுமார் யாதவ், 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உள்பட 68 ரன்களை குவித்து அசத்தினார். பெங்களூரு பந்துவீச்சில் ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சுமாரான தொடக்கம்: 152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சுமாரகவே அமைந்தது. டூ பிளேசிஸ் - அனுஜ் ராவத் ஜோடி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை மட்டுமே எடுத்தது. மிகப்பொறுமையாக விளையாடி வந்த டூ பிளேசிலஸ் 16 (24) ரன்களில் உனத்கட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
டெல்லி வாலாக்களின் அதிரடி: இதன்பின்னர், ஜோடி சேர்ந்த ராவத் - கோலி ஆகியோர் நிலையாக நின்று சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். குறிப்பாக, அனுஜ் ராவத் பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருவரும் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அனுஜ் ராவத் ரன்-அவுட்டாகி ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில், 2 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.