மும்பை:15ஆவது ஐபிஎல் சீசனின் 16ஆவது லீக் போட்டியில் மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று (ஏப். 8) மோதின. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
புரட்டி எடுத்த லிவிங்ஸ்டன்: இதன்மூலம், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 64 (27) ரன்களையும், ஷிகர் தவான் 35 (30) ரன்களையும் எடுத்தனர். குஜராத் பந்துவீச்சில் ரஷித் கான் 4 ஓவர்களில் 22 ரன்களை கொடுத்து (எகானமி: 5.50) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாய் சுதர்சன் 'DEBUT': 190 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு, கில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். மற்றொரு ஓப்பனரான மாத்யூ வேட் 6 (7) ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் மூன்றாவது வீரராக களமிறங்கினார்.
101 ரன்கள் பார்ட்னர்ஷிப்: கில் - சுதர்சன் ஜோடி, பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்தது. சுதர்சன் சீராக ரன்களை சேர்க்க, கில் அதிரடி காட்டி வந்தார். இந்த ஜோடி 101 ரன்களை சேர்த்த போது, 14.4 ஓவரில் ராகுல் சஹாரிடம் சுதர்சன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 35 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கில் 96:அடுத்து வந்த கேப்டன் பாண்டியா, கில்-க்கு உறுதுணையாக இருந்து ரன்களை சேர்ந்தார். அப்போது, கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரபாடா வீசிய 19ஆவது ஓவரில் பாண்டியா 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இருப்பினும், அந்த ஓவரின் 5ஆவது பந்தில் கில் 96 (59) ரன்களுக்கு கேப்டன் அகர்வால் கையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சதத்தை தவறவிட்ட அவர் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்திருந்தார்.