மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. தொடரின் 13ஆவது லீக் போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் நேற்று (ஏப். 6) மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளும் தங்களின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யமால் களமிறங்கின.
பட்டையைக் கிளப்பிய பட்லர்:இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்களை எடுத்தது. கடந்த போட்டியில் சதம் அடித்திருந்த பட்லர், இம்முறை 48 பந்துகளில் 70 ரன்களை குவித்திருந்தார். ஷிம்ரான் ஹெட்மயர் 42 (31), படிக்கல் 37 (29) ரன்கள் என பட்லருக்கு பக்கபலமாக ஆடினர்.
பெங்களூரு பந்துவீச்சில் ஹர்ஷல், டேவிட் வில்லி, ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். பெங்களூரு பந்துவீச்சின் கடைசி கட்ட ஓவர்களிலேயே பனிப்பொழிவின் தாக்கம் தென்பட்டதால், 170 ரன்கள் சற்று எளிமையான இலக்காக பார்க்கப்பட்டது.
ஆர்சிபியை சாய்த்த சஹால்:அதைத்தொடர்ந்து, பெங்களூரு அணி ஓப்பனர்களான கேப்டன் டூ பிளேசிஸ், அனுஜ் ராவத் ஆகியோர் பவர்பிளே ஓவர்களில் நிலையாக நின்று 48 ரன்களை குவித்தனர். இந்த சிறப்பான அடித்தளத்தை வைத்து, இன்னிங்ஸை கட்டமைக்க நினைத்த ஆர்சிபிக்கு சஹால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த டூ பிளேசிஸ் 5 பவுண்டரிகள் உள்பட 29 (20) ரன்களை எடுத்திருந்த போது, சஹால் பந்துவீச்சில் சிக்கி வெளியேறினார். இதற்கு அடுத்த ஓவரை வீசிய சைனி, மற்றொரு அனுஜ் ராவத்தை 26 (25) வெளியேற்றினார். இந்த அதிர்ச்சியில் இருந்து ஆர்சிபி மீள்வதற்குள், கோலி 5 (6) ரன்களில் ரன் அவுட்டானார். இது அந்த அணியின் நிதானத்தை குறைத்து அழுத்தத்தை அதிகமாக்கியது. சஹால் வீசிய அதே ஓவரில் டேவிட் வில்லி டக்-அவுட்டானார்.
இதன்பின்னர், ஷாபாஸ் அகமதுடன் சற்று நேரம் தாக்குபிடித்த ரூதர்போர்ட், போல்ட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, ஆர்சிபி அணி அப்போது, 12.3 ஓவர்களில் 87/5 என்ற நிலையில் தடுமாறியது. அதாவது பவர்பிளேவில் 48 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த பெங்களூரு, அடுத்த 39 பந்துகளில் 39 ரன்களை மட்டும் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 7 முதல் 13ஆவது ஓவர்கள் வரை இரண்டு பவுண்டரியும், ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. அதிலும், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை எடுத்தது ஷாபாஸ் (12ஓவது ஓவரில்) என்பது குறிப்பிடதக்கது.
தினேஷின் வருகை: இந்நிலையில், களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஆரம்பத்தில் இருந்தே பவுண்டரிகளை குவிக்க தொடங்கிவிட்டார். அஸ்வின் வீசிய 14ஆவது ஓவரில் தினேஷ், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸரை அடித்து மிரட்டினார். அந்த ஓவரில் மொத்தம் 21 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஷாபாஸ் அகமதும் தனது பங்கிற்கு தாக்குதலை தொடுக்க, 15ஆவது ஓவரில் 16 ரன்கள், 16ஆவது ஓவரில் 13 ரன்கள் என குவித்த தினேஷ் - ஷாபாஸ் ஜோடி தேவையான ரன் ரேட்டை 11-இல் இருந்து 8-க்கு கொண்டு வந்தது.
ஆட்டத்தை முடித்த ஹர்ஷல்:இதையடுத்து, சஹாலின் 17ஆவது ஓவரில் 3 ரன்களை மட்டும் எடுத்து தந்திரமாக தப்பித்த இந்த ஜோடி, போல்ட் வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்களை சேர்த்தது. மேலும், அந்த ஓவரின் 5ஆவது பந்தில் ஷாபாஸ் 45 (26) ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பிரசித் கிருஷ்ணாவின் 19ஆவது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை தினேஷ் பறக்கவிட்டார். இதனால், கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஜெய்ஸ்வால் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹர்ஷல் படேல் சிக்ஸர் விளாசி ஆர்சிபி அணியின் இரண்டாவது வெற்றியை உறுதிசெய்தார்.
இதன்மூலம், 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆர்சிபி , 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் பந்துவீச்சில் சஹால், போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சஹால் 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இறுதிநேரத்தில், அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றி பெற வைத்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வானார். அவர் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 44 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடதக்கது.
6ஆவது இடத்தில் ஆர்சிபி: இவ்விரு அணிகளும், மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி, 2 வெற்றிகளையும், 1 தோல்வியையும் பெற்றுள்ளன. எனவே, புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட் அடிப்படையில், தோல்வியடைந்த ராஜஸ்தான் (1.218) முதலிடத்திலும், வெற்றிபெற்ற பெங்களூரு (0.159) ஆறாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: IPL 2022: பவுலிங்கை தேர்வு செய்த ஆர்சிபி!