நவி மும்பை: ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் ஆட்டத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் நேற்று (ஏப். 4) மோதின.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி, 169 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 68 ரன்களையும், தீபக் ஹூடா 51 ரன்களையும் எடுத்தனர். ஹைதராபாத் சார்பில் நடரான், வாஷிங்டன் சுந்தர், ரோமாரியோ ஷெப்பேர்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
குர்னால் மிரட்டல்: இதையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத், பவர்பிளேவிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், மூன்றாவது வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். சற்றுநேரம் தாக்குபிடித்த மார்க்ரம் குர்னால் பாண்டியாவிடம் வீழ்ந்தார். இதையடுத்து, களமிறங்கிய பூரனும் அதிரடி காட்ட தொடங்கினார். குர்னால் பாண்டியாவின் கடைசி ஓவரில் திரிபாதி 44 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும், பூரன் களத்தில் இருக்கும் வரை ஆட்டம் ஹைதராபாத் பக்கம்தான் இருந்தது.
ஆவேஷின் 18ஆவது ஓவர்:அப்போது,18ஆவது ஓவரை ஆவேஷ் கான் வீச வந்தார். முதல் சிக்ஸர் போனாலும், மூன்றாவது, நான்காவது பந்தில் பூரன், அப்துல் சமத் ஆகியோர் ஆட்டமிழக்க, போட்டி லக்னோ பக்கம் திரும்பியது. அந்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆண்ட்ரூ டை வீசிய 19ஆவது ஓவரில் 11 ரன்களை எஸ்ஆர்ஹெச் அணி எடுக்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
ஹோல்டர் வேட்டை:ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் வாஷிங்டன் சுந்தரும் ஆட்டமிழக்க, ஹைதராபாத்தின் வெற்றி கை நழுவி போனது. மேலும், அந்த ஓவரின் நான்காவது, மற்றும் கடைசி பந்தில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹோல்டர் அந்த ஓவரில் வெறும் 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
5ஆவது இடத்தில் லக்னோ: இதன்மூலம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 157 ரன்களை எடுத்த ஹைதராபாத், 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது லக்னோ அணிக்கு இரண்டாவது வெற்றியாகும். லக்னோ அணி சார்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், குர்னால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஆவேஷ் கான் தேர்வானார். புள்ளிப்பட்டியலில், இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் லக்னோ 5ஆவது இடத்திலும், ஹைதராபாத் இரண்டு தோல்விகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: IPL 2022: டாஸ் வென்றது ஹைதராபாத்.. ஆனால்...!