கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டி நேற்று (மே 24) நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது.
டாஸை இழந்த ராஜஸ்தான் அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, மில்லர் - ஹர்திக் ஆகியோரின் வலிமையான பாட்னர்ஷிப்பால் குஜராத் அணி 19.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டு டேவிட் மில்லர் வெறித்தனம் காட்டினார்.
மில்லர் 68 ரன்களுடனும், ஹர்திக் 40 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக மில்லர் தேர்வுசெய்யப்பட்டார். முன்னதாக, ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக பட்லர் 89 ரன்களை எடுத்து ஆரஞ்ச் கேப்-ஐ தக்கவைத்துள்ளார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி, லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இன்றைய (மே 24) எலிமினேட்டர் போட்டியில் வெற்றியடையும் அணியுடன் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மோதும். இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.
இதையும் படிங்க: அறிமுக தொடரிலேயே தடம் பதித்த இளம் நட்சத்திரம் திலக் வர்மா!