மும்பை:15ஆவது ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. லீக் சுற்றுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வார இறுதி நாள்கள் என்பதால் இன்று (ஏப். 30) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
மாலை போட்டி:முதல் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணி, டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சந்திக்கின்றன. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்றாலும், குஜராத் விளையாடிய 8இல், ஒரு போட்டியில் மட்டும் தோற்று முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ஆர்சிபி அணிக்கு கடந்த இரண்டு போட்டிகள் (ஹைதராபாத், ராஜஸ்தான்) மிக மோசமானதாக அமைந்தது. அந்த அணி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருந்தாலும் பேட்டிங், பௌலிங் ஆகியவை 'டல்' அடிக்கிறது. விராட், டூ பிளேசிஸ், மேக்ஸ்வேல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது ஆகியோர் நிச்சயம் இன்றைய தினம் சோபித்தே ஆக வேண்டும்.
ஒரு போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிவிட்டால், பந்துவீச்சு தாக்குதல் மூலம் வெற்றிபெறுவதும், பந்துவீச்சாளர்கள் போக்குகாட்டிவிட்டால் பேட்டர்கள் கைகொடுப்பது என குஜராத் அணிக்கு முதல் தொடரே மிகவும் அதிர்ஷ்டமானதாக அமைந்துவிட்டது. இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி என்பதால், இப்போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ்:சுப்மான் கில், விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப்.