கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தற்போது மீண்டும் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று நாடு முழுவதும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சென்னையில் இன்று (ஏப்.9) பார்வையாளர்களின்றி தொடங்குகிறது.
இதில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவிருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 17 முறையும், பெங்களூரு 9 முறையும் வென்றுள்ளது. முதல் போட்டியானது சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.