துபாய்: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 33ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று (செப். 22) மோதுகின்றன.
வார்னர் வாக்-அவுட்
இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, டேவிட் வார்னர் - சாஹா ஜோடி களம் கண்டது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு டி20 போட்டியை ஆடும் டேவிட் வார்னர், இப்போட்டியில் டக்-அவுட்டாகி வெளியேறினார். சாஹா, கேப்டன் வில்லியம்சனுடன் நிதானம் காட்டிவந்த நிலையில், ராபாடா வீசிய முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார்.
வில்லியம்சன் வெளியேற்றம்
இதன்பின்னர், சாஹா வேகமெடுப்பார் என நினைத்த வேளையில், அதே ஓவரின் கடைசிப் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து 18 (17) ரன்களில் வெளியேறினார். டெல்லி அணி பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக பந்துவீச வில்லியம்சன், மணீஷ் பாண்டே ஆகியோர் களத்தில் இருந்தாலும் ரன்ரேட் உயரவே இல்லை.