அபுதாபி: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 36ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று (செப். 25) மோதுகிறது.
ஆட்டம் கண்ட தொடக்கம்
இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, வழக்கம்போல் டெல்லி அணிக்கு பிருத்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கடந்த போட்டியில் மிரட்டிய தவான், இப்போட்டியில் 8 (8) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிருத்வி ஷா 10 (12) ரன்களுக்கு நடையைக்கட்ட, ஸ்ரேயஸ் ஐயருடன் கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.