அகமதாபாத்:கரோனா தொற்று நாடு முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஐபிஎல் தொடரானது எந்தச் சலனமும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரே ஒரு வெற்றியைப் பதிவு செய்து கடைசி இடத்திலும் உள்ளன.
பஞ்சாப் அணிக்கு பெருந்தொந்தரவாக பந்துவீச்சு இருந்துவந்த நிலையில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முகமது சமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை மிடில் ஆர்டரை மிரட்சியடைய வைத்தனர். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நான்கில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய பஞ்சாப், சேப்பாக்கம் ஆடுகளத்தை தன்வசமாக்கி கடந்த போட்டியை வென்றது. நிக்கோலஸ் பூரன் தொடர்ந்து சொதப்பி வருவதால் டேவிட் மாலன் இன்று பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.