சார்ஜா: ஐபிஎல் 2021 தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு லீவிஸ், ஜெய்ஷ்வால் சுமாரான தொடக்கத்தை அளித்தனர். ராஜஸ்தான் அணி 27 ரன்கள் எடுத்தபோது, முதல் விக்கெட்டாக ஜெய்ஷ்வால் 12 (9) ரன்களில் வீழ்ந்தார்.
சுருண்டது ராஜஸ்தான்
அதுவரை அதிரடி காட்டி வந்த லீவிஸ் 24 (19) ரன்களில் ஆட்டமிழக்க, சாம்சன், டூபே, கிளேன் பிளிப்ஸ் ஆகிய மிடில்-ஆர்டர் பேட்டர்கள் தொடர்ச்சியாக பெவிலியனுக்கு அணிவகுத்தனர்.
சற்றுநேரம் தாக்குபிடித்த திவாத்தியா 12 (20), ஸ்ரேயஸ் கோபால் 0 (1), மில்லர் 15 (23), சக்காரியா 6 (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ரோஹித் அதிரடி
முஸ்தபிஷூர் ரஹ்மான் கடைசி நேரத்தில் சிக்ஸர் அடிக்க ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை பந்துவீச்சில் கவுல்டர்-நைல் 4 விக்கெட்டுகளையும், ஜிம்மி நீஷம் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். நான்காவது ஓவரில் ரோஹித் 22 (13) ரன்களிலும், ஆறாவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 13 (8) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் அணியை விரைவாக வெற்றி நோக்கி அழைத்துச்சென்றார். சக்காரியா வீசிய எட்டாவது ஓவரில் மட்டும் அவர் 24 ரன்களை குவித்தார்.
ராக்கெட் வேகத்தில் மும்பை
முஸ்தபிஷூரின் அடுத்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என அரைசதம் அடித்ததுடன், 8.2 ஓவர்களிலேயே இலக்கையையும் கடந்தார். இஷான் கிஷன் 50 (25) ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 5 (6) ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் தரப்பில் சக்காரியா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 70 பந்துகள் மீதம் வைத்து வெற்றிபெற்றதன் மூலம் மும்பை அணி ரன்ரேட்டை அதிகப்படுத்திய நிலையில், 12 புள்ளிகளுடன் மும்பை அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைத்தது.
இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே வாஷி... வாழ்த்து மழையில் வாஷிங்டன் சுந்தர்!