சென்னை: இந்திய அணி டாப் பேட்மேன்களான ரோஹித் ஷர்மா, விராத் கோலி ஆகியோர் தலைமையிலான மும்பை இந்தியனஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதும் 2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப். 9) நடைபெறவுள்ளது.
டி20 அம்சங்களுடன் களமிறங்கும் மும்பை அணி
சரியான வெற்றிக்கலவையுடன் இருக்கும் மும்பை அணி, போட்டியை வெல்வதற்கான வித்தையை அணியின் வீரர்கள் நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். பேட்ஸ்மேன், பவுலர், ஆல்ரவுண்டர், ஹார்ட் ஹிட்டர் என டி20 போட்டிக்கு தேவையான அனைத்து அம்சங்களுடன் கூடிய வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த அணியாக இந்தச் சீசனிலும் களமிறங்குகிறது.
ரோஹித், குவிண்டன் டீ காக், கிறிஸ் லின், பொல்லார்டு, இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ் என பேட்டிங்கிலும், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், நாதன் கவுண்டர் நைல், ராகுல் சஹார், பியூஷ் சாவ்லா என பவுலிங்கிலும், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா சகோதரர்கள் ஆல்ரவுண்டர்களாகவும் செயல்படவுள்ளனர்.
ஆர்சிபிக்கு பலம் சேர்க்கும் மேக்ஸ்வெல் வருகை
சிறந்த நட்சத்திர வீரர்களை கொண்ட அணியாக ஒவ்வொரு சீசனிலும் களமிறங்கினாலும் இதுவரை கோப்பையை வெல்ல பெரும் போராட்டம் நடத்தி வரும் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி திகழ்கிறது.
விராத் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல் முக்கிய பேட்மேன்களாகவும், யஷ்வேந்திரா சஹால், கெய்ல் ஜெமிசன், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா பவுலர்களாகவும். வாஷிங்டன் சுந்தர், கிளென் மேக்ஸ்வெல் ஆல்ரவுண்டர்களாகவும் உள்ளனர்.
மிடில் ஆர்டரில் தவித்து வந்த ஆர்சிபிக்கு மேக்ஸ்வெல்லின் வருகை பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் கைகொடுக்கும் அவர் தனது அணியை வெற்றிநடை போடச் செய்வார் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதுவரை மும்பை அணியே ஆதிக்கம்
மும்பை இந்தியனஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் மும்பை அணி 17, பெங்களூரு அணி 9 போட்டிகளில் வென்றுள்ளன.
அந்த வகையில் இன்றைய போட்டியில் மும்பை அணி ஆதிக்கம் செலுத்தும் என்று கருத்துகள் பகிரப்பட்டாலும், புதிய வீரர்களுடன் ஆர்சிபி அணி திடீர் ஆச்சர்யம் அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 முதல் போட்டியில் மோதவிருக்கும் மும்பை - ஆர்சிபி கரோனாவிலிருந்து மீண்ட படிக்கல்
ராயல் சேலஞ்சர்ஸ் இடதுகை தொடக்க பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் கடந்த சீசனில் அறிமுகமாகி சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்தார். பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடியாக ரன்கள் குவித்து எதிரணி பவுலர்களுக்கு தலைவலியாக திகழ்ந்தார்.
இதையடுத்து இந்த சீசனில் தங்களது அணியில் அவர் சேர்ந்த சில நாள்களுக்கு பிறகு அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு பிறகு கரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டால் போட்டி மிகவும் சவாலானதாக அமையும்.
மும்பைக்கு சிக்கல்
மும்பை இந்தியனஸ் அணியில் தொடக்க வீரராக ரோஹித் ஷர்மாவுடன் இணைந்த யாரை இறக்க என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை பேட்ஸ்மேனான குவான்டின் டீ காக், பாகிஸ்தான் தொடரை முடித்த கையோடு தற்போது அணியில் இணைந்துள்ளார். மற்றொரு தொடக்க பேட்மேனான கிறிஸ் லின் உள்ளார்.
இந்த இருவரில் ஒருவரைத்தான் களமிறக்க முடியும் என்பதால் ஆடுகளத்தின் தன்மை பொறுத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
சவாலான ஆடுகளம்
இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வான்கடே மைதானம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எம். சின்னசாமி ஸ்டேடியம் என இந்த அணிகளின் உள்ளூர் ஆடுகளங்களான பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானவையாக இருந்துள்ளன. இதனால் மிகவும் சுலமாக 150 ரன்களுக்கு மேல் குவித்து எதிரணியை திணறடிக்கும் வாய்ப்பு இருந்தது.
ஆனால் தற்போது இரு அணிகளுக்கு எம்ஏ சிதம்பரம் மைதானம் உள்ளூர் மைதானமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள ஆடுகளம் பேட்மேன்களுக்கு கடினமாகவும், பந்து மெதுவாக எழும்பும் விதமாகவும் அமைந்திருப்பதால் நிச்சயம் சவாலாகவே இருக்கும்.
அணிகள் விவரம்:
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஆடம் மில்னே, ஆதித்யா தாரா, அன்மோல் ப்ரீத் சிங், அங்குல் ராய், அர்ஜூன் டெண்டுல்கர், கிறிஸ் லின், தவால் குல்கர்னி, ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷான் (வி. கீப்பர்), ஜெமி நீஷம், ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெயந்த் யாதவ், கைரான் பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, மார்கோ ஜன்சென், மோஷின் கான், நாதன் கவுண்டர் நைல், பியூஷ் சாவ்லா, குவாண்டின் டீ காக் (வி. கீப்பர்), ராகுல் சஹார், செளரப் திவாரி, சூர்ய குமார் யாதவ், ட்ரெண்ட் போல்ட், யுத்விர் சிங்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராத் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஃபின் அலென் (வி. கீப்பர்), ஏபி டி வில்லியர்ஸ் (வி. கீப்பர்), பவன் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், டேணியல் சாம்ஸ், யஷ்வேந்திரா சஹால், ஆடம் ஸாம்பா, ஷாபஸ் அகமத், முகமது ஷிராஜ், நவ்தீப் சைனி, கேன் ரிச்சர்ட்சன், ஹர்சல் படேல், கிளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ராஜத் படிடார், முகமது அசாரூதீன், கெயில் ஜெமீசன், டேனியல் கிறிஸ்டியன், சுயாஷ் பிரபுதேசாய், கே.எஸ்.பாரத்
இதையும் படிங்க: IPL 2021: டிசிசிஐ நிர்வாகிகளை தொடக்கப் போட்டிக்கு அழைத்த பிசிசிஐ செயலாளர்