தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021: ஹர்ஷலின் ஹாட்ரிக்கால் அதலபாதளத்தில் வீழ்ந்தது மும்பை! - பெங்களூர்

ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

IPL 2021
IPL 2021

By

Published : Sep 27, 2021, 6:12 AM IST

துபாய்: கரோனா பெருந்தொற்று காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி துபாயில் தொடங்கியது.

இத்தொடர் துபாய், அபுதாபி, சார்ஜா என மூன்று இடங்களில் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று (செப். 26) நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

கோலி 10 ஆயிரம்

இப்போட்டியில், டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 56 (37) ரன்களையும், கோலி 51 (42) ரன்களையும் எடுத்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.

கோலி, பும்ரா வீசிய நான்காவது பந்தில் சிக்சர் அடித்ததன் மூலம், டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் டேவிட் வார்னரைப் பின்னக்குத் தள்ளி, கோலி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மும்பையின் தொடக்கம்

முதல் மூன்று இடங்களில முறையே கிறிஸ் கெயில், கைரன் பொல்லார்ட், பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் ஆகியோர் உள்ளனர்.

இதனையடுத்து, களமிறங்கிய மும்பை அணிக்கு டி காக், ரோஹித் சர்மா இணை அசத்தல் தொடக்கத்தை அளித்தது. பவர்பிளேயில் இந்த இணை 56 ரன்களைச் சேர்த்தது. பவர்-பிளே முடிந்த அடுத்த ஓவரில் டி காக் 24 (23) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால், மறுபுறம் ரோஹித் சீராக ரன்களைச் சேர்த்துக்கொண்டிருக்க, பத்தாவது ஓவரை கோலி மேக்ஸ்வெல்லிடம் ஒப்படைத்தார். அதற்கும் நல்ல பலன் கிடைத்தது. செட்டிலாகி இருந்த ரோஹித், மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்காகத் தூக்கி அடிக்க, பந்து படிக்கலிடம் தஞ்சமடைந்தது.

உடைந்தது பாட்னர்ஷிப் மட்டுமல்ல

ரோஹித் 43 (28) ரன்களில் வெளியேறியபோது, மும்பையின் வெற்றியையும் தன்கூடவே அழைத்துச் சென்றுவிட்டார் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இந்த சீசன் முழுவதும் ஃபார்ம் இன்றி தவித்துவரும் இஷான் கிஷன் 9 (12) ரன்களில், ரோஹித் அவுட்டான அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் விக்கெட்டை சஹால் வீழ்த்தியிருந்தார்.

இஷான் கிஷன் வெளியேறி சரியாக இரண்டு ஓவர்களில் (14ஆவது ஓவர்) குர்னால் பாண்டியா 5 (11) மேக்ஸ்வெல் பந்துவீச்சில் போல்டானார். சிராஜ் வீசிய அடுத்த ஓவரில், சூர்யகுமார் யாதவ் 8 (9) ரன்களில் சஹாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குப் புறப்பட்டார்.

மும்பை அணி வெற்றிக்கு 24 பந்துகளில் 51 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் ஹர்திக், பொல்லார்ட் என கையில் ஐந்து விக்கெட்டுகள் இருந்தன.

ஆர்சிபியின் 3ஆவது ஹாட்ரிக்

இந்நிலையில், ஹர்ஷல் படேல் 17ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்து வைடானது. மீண்டும் முதல் பந்தை வீசிய ஹர்ஷல், ஹர்திக் பாண்டியாவை 3 (6) ரன்களில் வெளியேற்றினார். அடுத்த பந்தில், பொல்லார்ட்டை 7 (10) ரன்களில் போல்டாக்கி அசத்தினார்.

அப்போது ஹாட்ரிக் வாய்ப்பு உருவானது. ராகுல் சஹார் களத்திற்கு வந்தார். அந்த நான்காவது பந்தை லோ-ஃபுள்டாஸாக வீசி அவரை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்க, தனது முதல் ஹாட்ரிக் விக்கெட்டைப் பதிவுசெய்தார். மேலும், இதற்கு முன் பெங்களூரு அணி தரப்பில் இருவர் மட்டுமே ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக இந்தியப் பந்துவீச்சாளர் பிரவீன் குமாரும், 2017ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி சுழற்பந்துவீச்சாளர் சாமுவேல் பத்ரியும் ஹாட்ரிக்கைப் பெற்றிருந்தனர். இந்த இரு ஹாட்ரிக்குகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பவர்பிளேவுக்கு முன் - பவர்பிளேவுக்குப் பின்

இதன்பின், சஹால், பும்ராவையும், ஹர்ஷல் படேல், மில்னேவையும் விக்கெட் எடுக்க, பெங்களூரு அணி தனது ஆறாவது வெற்றியைப் பதிவுசெய்தது. பெங்களூரு பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், சஹால் 3 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் ஆறு ஓவர்களில் 56 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் கூட இழக்காமல் இருந்த மும்பை, அடுத்த 12.1 ஓவர்களில் 55 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டி காக், ரோஹித் தவிர்த்து வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவே இல்லை.

இதன்மூலம், 18.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்களை எடுத்த மும்பை, புள்ளிப்பட்டியலில் குறைந்த நெட் ரன்ரேட் காரணமாக 7ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேக்ஸ்வெல் மிரட்டல்

இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹர்ஷல் படேல், மொத்தம் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கு கொடுக்கப்படும் பர்பிள் கேப்-ஐ தக்கவைத்துள்ளார்.

பேட்டிங்கில் 56 ரன்களையும், பந்துவீச்சில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்திய மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் துபாயில் நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று (செப். 27) மோதுகிறது.

இதையும் படிங்க:IPL 2021: ரசிகர்களை பதறவைத்து வெற்றி கண்ட சிஎஸ்கே!

ABOUT THE AUTHOR

...view details